Wednesday, June 26, 2019

பாதம் கழுவிய சாய்பாபாவின் அற்புத லீலை! - ஓம் சாயிராம்!

பாதம் கழுவிய சாய்பாபாவின் அற்புத லீலை!  - ஓம் சாயிராம்!

கோவை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த போதிலும் சரி, கோவை பல்கலைக்கழகத்தில் படித்த போதும் சரி - பலமுறை கடந்து சென்ற இடம் சாய்பாபா காலனி! வேடிக்கை என்னவென்றால், பலமுறை கடந்து சென்ற போதிலும் சாய்பாபா கோவில் எங்கு இருக்கின்றது எனக்கு தெரியாது!

ஒரு முறை நானும் என்னுடைய நண்பர்கள் இருவரும் சாய்பாபா காலனிக்கு சென்றிருந்தோம், ஒரு டீ கடையில் டீயை குடித்தவாறு நான்

“சாய்பாபா கோவில் எங்கே இருகின்றது?” என்று கேட்டேன்.
அதற்கு நண்பர்கள் சிரித்தபடி-

இத்தனை ஆண்டுகளாக இங்கே இருக்கிறாய் இது கூட தெரியவில்லையா?” – என்றனர், அருகில் இருந்த பாதையை காட்டியபடி…

டீயை குடித்துவிட்டு அவர்கள் இருவரும்
வங்கிவரை சென்று வருகிறோம், நீ இங்கேயே இரு” -  என்றனர்

“சரி நான் பாபா கோவிலுக்கு சென்று வருகிறேன், இன்று வியாழக்கிழமை” என்றேன்…
அவர்களும், சரி என்று தலை அசைத்தவாறு புறப்பட நான் பாபா கோவில் நோக்கி புறப்பட்டேன. நான் கோவில் அடைந்த போது அங்கே பாபாவிற்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது…

முதல் முறை அந்த கோவிலுக்கு செல்வதால் எனக்கு பாதத்தை கழுவும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை! மேலும் பாபாவை நண்பர்கள் திரும்பி வரும் முன் தரிசித்துவிட்டு வர வேண்டும் என்கிற அவசரம்.

மனதிற்குள் சிறு உறுத்தலுடன் கோவிலுக்கு சென்ற நான் - பாபாவின் அழகிய திருமேனிக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அபிஷேகத்தில் என்னை மறந்து சேவித்துக் கொண்டிருதேன்.

அப்பொழுது பாபாவின் அபிஷேக தீர்த்தம் அங்கே இருந்த பக்தர்களுக்கு அர்ச்சகர் அவர்களால் கொடுக்கப்பட்டது. அவர் தீர்த்தத்தை கொடுத்தபடி என்னருகில் வந்தார் எனக்கு முன்பு நின்றிருந்த நபர் நகரும் போது அவருடைய கைபட்டு தீர்த்தம் வைத்திருந்த பாத்திரம் என் கால் அருகில் விழ என் கால்கள் முழுவதும் நனைத்தது!

பாபாவின் தீர்த்தம் நம் கால்களில் படுகிறதே என்று பதறிப் போன என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் வழிய, என் உடல் சிலிர்த்தது.

“உன் உள்ளத்தில் உள்ள குறையை நீ, மறந்தாலும் நான் மறவேன்!” என்பதை எங்கும் நிறைந்த அவர், ஏகாந்தமான அவர் உணர்த்தினார். இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்று நினைத்தாலும் உடல் சிலிர்த்து கண்களில் நீர் ததும்பும்! ஓம் சாயிராம்!

Wednesday, June 5, 2019

குடியின் நிழலை தேடி!

குடியின் நிழலை தேடி!

அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
அன்பை மறக்கடிக்கும், அங்கே மட்டும் போகாதே!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஆண்டவனின் அருள் நீக்கும், அந்த இடம் மட்டும் போகாதே!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
இருளினில் உன்னை தள்ளும், அந்த இடம் மட்டும் போகாதே!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஈர உள்ளம் கொண்ட உன்னை, ஈன செயலில் தள்ளும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
உன்னதமான உன்னை, பிறர் உதாசீனம் செய்யும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஊரெல்லாம் உன்னை பார்த்து, சிரிக்க செய்யும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
எளிமையான உன்னை, எமனாய் மாற செய்யும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஏற்றங்கள் அற்ற, ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்வை தரும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஐயம் கொண்டு, உந்தன் வாழ்வை ஒழிக்கும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஒழுக்கம் மறக்க செய்து, இழுக்கை செய்யத் தூண்டும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஓங்கி ஒழிக்கும் உந்தன் புகழ், மடியச் செய்யும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
ஒளசதம் என்றே சொல்லி ஆரம்பிக்கும் உன்னை, அடிமையாக்கும்! 
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!
எஃகு கோட்டையான உன் ஒழுக்கத்தை உடைத்து எறியும்!
அங்கே மட்டும் போகாதே! அங்கே மட்டும் போகாதே!