முனிவரும்! முனியாண்டியும்!
ஒரு ஊரில் முனியாண்டி என்ற பெரும் பணக்காரர் வாழ்ந்து கொண்டிருந்தார்! அவர் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்த மக்களிடம் தன் பண மற்றும் ஆள் பலத்தால் நில புலன்களை வயிற்றில் அடித்து பிடுங்கி சேர்த்தார். அவரின் அராஜகத்தை தட்டி கேட்க இயலாதவர்கள் அவரை சபித்தார்கள்! அந்த சாபத்தின் விளைவாக அவரின் நிம்மதி தொலைந்து போனது! தன்நோய் கண்டு அஞ்சியவர் ஒரு முனிவரை பார்த்து பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று சென்றார்! அங்கே -
முனியாண்டி: சாமி நான் செய்த பாவத்தால் இன்று நிம்மதியில்லாமல் போய்விட்டது, இந்த துயரத்தில் இருந்து மீள ஒரு வழி சொல்லுங்கள்?
முனிவர்: நீ பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் பாவத்திற்கு அஞ்சாமல் பல பாவங்கள் செய்தாய்,
முனியாண்டி: ஆமாம் சாமி!
முனிவர்: நீ அப்படி சம்பாதித்த அந்த பணத்தை எல்லாம் தான தர்மம் செய்துவிடு!
முனியாண்டி: சரிங்க சாமி!
முனியாண்டி தன்னிடம் இருந்த எல்லா சொத்து சுகங்களை எல்லாம் தானமாக கொடுத்துவிட்டான்! ஆனபோதும் அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை! மீண்டும் முனிவரை பார்க்க சென்றவன் முனிவரை பார்த்து சட்டரே கோபமாக கேட்டான்...
முனியாண்டி: சாமி நீங்க சொன்ன மாதிரி என் சொத்துக்கள் அனைத்தையும் தானமாக கொடுத்துவிட்டேன், ஆன போதும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை! இன்னும் சொல்ல போனால் அதிகமாகிவிட்டது!
முனிவர்: நீ யாருக்கு தானமாக கொடுத்தாய்?
முனியாண்டி: இது நாள்வரை என்னோடு எனக்கு உதவியாக இருந்தவர்கள், என் சகோதரர் பிள்ளைகள், சுற்றம் மற்றும் நட்புகளுக்கு தானமாக கொடுத்தேன்!
முனிவர்: அப்படியா!
முனியாண்டி: ஆமாம்!
முனிவர்: நீ தானம் என்பதின் அர்த்தம் அறியாதவன்!
முனியாண்டி: ஏன் சாமி! என்னிடம் இருந்த பாவப்பட்ட அனைத்தும் கொடுத்துவிட்டேனே!
முனிவர்: நீ தானமாக கொடுத்த அனைவரும் நீ செய்த பாவத்தை சரி என்று ஒப்பு கொண்டவர்கள் அல்லது உன்னோடு சேர்ந்து பாவம் செய்தவர்கள்!
முனியாண்டி: ஆமாம் சாமி! ஆனால் சேர்த்த அனைத்தயும் கொடுத்தபின் நான் ஒரு பாவமும் செய்யவில்லை, என் பாவம் கூடிக்கொண்டதை போல் உணர்கிறேன்!
முனிவர்: பாவம் செய்து சம்பாதித்ததை பல பாவிகளுக்கு கொடுத்த பெரும் பாவியாய் நீ ஆனதால் அப்படி உணர்கிறாய்!
முனியாண்டி: ஐயோ! என்ன சாமி நான் தான் பாவத்தால் வந்த அனைத்தையும் தானம் கொடுத்துவிட்டானே?
முனிவர்: பணத்தை பகிர்ந்தளித்தால் பாவம் குறையும் என்று யார் சொன்னது!
முனியாண்டி: நீங்கள் தான்!
முனிவர்: பணத்தை பகிர்ந்தால் பாவம் குறையாது, அதை ஏற்பவர் பாவிகளாய் இருந்தால் அவர் பாவத்தின் பங்கும் உன்னை சேரும்!
முனியாண்டி: ஓ! (கண்ணீர் சிந்தியவாரே)
முனிவர்: பாத்திரம் அறிந்து பிட்சை இடு! பாவத்தை பகிர்ந்துகொள்ள யாராலும் முடியாது, அது பகிர்ந்தால் பன்மடங்காகும் தவறானவர் கை சேர்த்தால்! பிறருக்கு எந்த பாவமும் இழைக்காது வாழ்தலே சிறந்த வாழ்கை!