Monday, February 29, 2016

குழந்தையும் ஒரு கொசுவும்!

பெங்களூர்
12.02.2016
குழந்தையும்  ஒரு கொசுவும்!

ஒரு நாள்! சிறு குழந்தை ஒன்று தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது, அப்பொழுது அங்கே வந்த ஒரு கொசு   குழந்தையின் காதருகே சென்று ரீங்காரமிட குழந்தை விழித்துக்  கொண்டது. தன்னை கடித்து ரத்தம் குடித்து நோய் பரப்ப தான் அந்த கொசு வந்துள்ளது என்பதை அறியாக் குழந்தை தன் புன்னகையால்  கொசுவை வரவேற்க! கடிக்க மனம் இல்லா கொசு! குழந்தையை பார்த்து சொன்னது -

கொசு: உன்னை நான் கடிக்கப் போகிறேன்!

குழந்தை: என்னை ஏன் நீ கடிக்கணும்?

கொசு: உன்னை கடிதால் தானே என் பசியாற்றி அதற்கு கைமாறாய் உனக்கு நோய் பரப்ப என்னால் முடியும்?

குழந்தை: நீ ஏன் நோய் பரப்ப எண்ணுகிறாய்?

கொசு: உங்கள் வீடும் சுற்றுப்புறமும் தூய்மையாய் இல்லை அதனால் தான் என்றது!

குழந்தை: எனக்கு நோய் வந்தால் என்னை நேசிக்கும்  தாயும், தந்தையும் மிகவும்   வருந்துவார்கள். நானும் அழுது கொண்டே இருப்பேன்!

கொசு: அப்படியா?!

குழந்தை:   ஆமாம், பிள்ளைக்கு உடல் நலம் குன்றினால் பெற்றவர்கள் சந்தோசிக்கவா முடியும்?

கொசு: ஓ! அப்படியா! போன வருடம், உன் அக்காவுக்கு மலேரியா வந்ததே?

குழந்தை: ஆமாம், அக்கா மிகவும் சிரமபட்டால்!

கொசு: போன மாதம் உனக்கு வயிற்று போக்கு இருந்ததே!

குழந்தை: ம்ம்… என்னால் தாங்க முடியவில்லை, ஊசி, மருந்து எல்லாம் கொடுத்தாங்க.. ஊசி வலி எப்படி இருந்துச்சு தெரியுமா?

கொசு: தெரியாதே!

குழந்தை: ரொம்ப வலிக்கும்! நோய் வந்தா அம்மா விளையாட கூட விடமாட்டாங்க, பிடித்ததை சாப்பிடக்   கொடுக்க மாட்டாங்க...

கொசு: ஓ! அப்படியா!

குழந்தை: நீங்க ஏன் நோய் பரப்புறீங்க?

கொசு: நாங்கள் என்ன வேண்டும் என்றா  நோய் பரப்புறோம்? நாங்கள் வசிக்க இடம் எங்கே கொடுக்கிறார்களோ அங்கே கைமாறாய் நோயை தருகிறோம்!   

குழந்தை: ஓ! அப்படியா!

கொசு: ஆமாம்!

குழந்தை: அப்போ அம்மா அப்பா எங்களை சுத்தமாக வைத்திருப்பதை விட வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாய் வைத்தாலே நாங்கள் ஆரோக்கியமாக வளர முடியும், இல்லையா?

கொசு: ஆமாம்! நீ கூறுவது நூறு சதவீதம் உண்மை, நாங்கள் தங்குவதற்கு நீர் தேங்கி இருந்தால் அதுவே போதும். 

குழந்தை:  அப்படியானால் நீர் தேங்காமல் இருந்தால் உங்களால் உயிர் வாழ முடியாது அப்படிதானே?

கொசு: ஆமாம்!

குழந்தை: இது என் பெற்றோருக்கு தெரியாதா?

கொசு: தெரியும்!

குழந்தை: இல்லை! தெரியாது!

கொசு: தெரியும்!

குழந்தை: எப்படி தெரியும் என்று சொல்கிறாய், தெரிந்து இருந்தால்
எங்களை துன்புறுத்தும் உங்களை, எப்படி வாழவிடுவார்கள்?

கொசு: ஏன் தெரியாது, நாங்களும் எங்கள் நோயின் வீரியத்தை மாற்றி மாற்றி பார்த்தும், மக்கள் அலட்சியமாகவே இருகின்றனர் - மலேரியா, டெங்கு இப்படி பல நோய்களை பரப்பியும் மக்கள் தூய்மை என்பதை நாள் தோறும் கடமையாய் செய்ய மறுகின்றனர்!

குழந்தை: அப்படி என்றால் என் பெற்றோர் என் மீது அக்கறை இல்லாதவர்களா? எல்லாம் தெரிந்தும், என்னை இப்படி கொசுவின் பிடியில் மாட்டிவிடுகின்றனரே?

கொசு: ஆமாம்! ஆமாம்! இன்றும் நான் என் கடைமையை செய்யத் தான் போகிறேன்!

குழந்தை: வேண்டாம்! என்னை கடித்து விடாதே, விட்டு விடு!

கொசு: என்னை மன்னித்து விடு! நான் உன்னை கடிப்பதே அவர்களை எழுப்பத் தான்!

குழந்தை: வீல் என்று அழ .... அங்கே விழித்தது குழந்தை மட்டும் அல்ல!

படைப்பு,

சாமான்யன் சந்திரசேகரன்
chandru29@gmail.com 

No comments:

Post a Comment